ஓசூர் பி.எம்.சி டெக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஓசூர் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் பெருமாள் தலைமை வகித்தார், பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் மலர் முன்னிலை வகித்தார். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் குமார், பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குனர் சுதாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பி.எம்.சி டெக் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேரா. பாலசுப்ரமணியம், ஐடிஐ முதல்வர் பாபு ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

ஓசூர் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் துணை பொது மேலாளர் பிரிட்டோ மற்றும் ஓசூர் கேப்ரியேல் தொழிற்சாலையின் முதுநிலை மேலாளர் அருண்குமார் ஆகியோர் பி.எம்.சி டெக் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பல்கலைக்கழக தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தடம் படத்தின் கதாநாயகன் இளம்நடிகர் அருண் விஜய் மற்றும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் கதாநாயகியும் விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை மெகா தொடரின் கதாநாயகி நடிகை ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் கௌரவ விருந்தினர்களாக ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு மாணவர்களிடையே நடனமாடி விழாவை சிறப்பித்தனர். மேலும் அவர்கள் திரைப்பட வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டு வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் லட்சியத்தை நோக்கி பயணித்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்தினார்கள். பின்னர் பி.எம்.சி கல்வி நிறுவனங்களின் மாணவ- மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது, இவ்விழாவில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு ஆண்டு விழாவைக் கண்டு களித்தனர். இவ்விழாவினை கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.